Sunday, June 30, 2019

அண்ணாமலையார் கோயில் பள்ளிபடை கோயில் அல்ல

அண்ணாமலையாருக்கே  அரோகராவா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் இன்று உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் சைவ தலமாகும். இத்தலம் பஞ்ச பூத தலதங்களில் அக்னி தலமாகவும் , ஆதார தலங்களில் மணிப்பூரக தலமாகவும் , முக்தி தலங்களில் "நினைத்தாலே முக்தி" தரும் தலமாகவும் விளங்குவதே இதன் சிறப்பு என்றாலும் ,  மேலும் மிக முக்கிய காரணம் இக்கற்றளி தன்னகத்தே நீண்ட நெடிய வரலாற்றை புதைத்து வைத்துள்ளதே ஆகும்.

சமீப காலமாக , அண்ணாமலையாரின் பெயருக்கு ஊரு விளைவிக்கும் வன்னமாக பல குழுக்கள் சுயலாபம் தேட பல கட்டுக்கதைகளை மக்களிடம் அவிழ்த்துவிட்டு முகம் சுளிக்கும் வன்னம் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இணையத்திலும் , சமூக வலைத்தளத்திலும் ஆதாரமற்ற கதை ஒன்று , திருவண்ணாமலை கோவிலின் பெரிய நந்தியை வைத்து உலாவியது. அது அடங்கிய சில நாட்களிலே , அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவர் "இடைக்காட்டு" சித்தர் சமாதி மீது அமைந்து உள்ளது என்று அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

நாளுக்கு நாள் இதுபோன்று பல தவறான செய்திகள் பல உலா வருவதால் , மனமாற அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் அறியாமையின் பால் பலி ஆகியதன் விளைவே , இன்று கிரிவல பாதை முழுவதும் புது புது ஆசிரமங்களும் , ஆக்கிரமிப்புகளும் முளைக்க காரணம். இருபது வருடங்கள் முன்னர் இருந்த எழில் கொஞ்சும் கிரிவல பாதைக்கும் இன்று இருக்கும் பாதைக்கும் பல மாற்றங்கள். இன்று திருவண்ணாமைலையை சேர்ந்த ஒரு நபர் வெளியூரில் சென்று ஊர் பெயரை சொன்னால் மக்கள் முதலில் விசாரிப்பது அண்ணாமலையாரை பற்றி அல்ல , மாறாக "உங்கள் ஊரில் நிறைய சித்தர்கள் இருக்கிறார்களாமே " என்பது தான். நாளுக்கு நாள் அண்ணாமலையாரின் பெயர் மெல்லமாக தேய்ந்து , திருவண்ணாமலையின் அடையாளமாக இந்த கிரிவல பாதை சித்தர்கள் உரு எடுத்து வருன்றனர்.

அண்ணாமலையார் கோவிலின் தோற்றம் :

உலக பிரசத்தி பெற்ற இக்கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல்  இயங்கி வருவதற்கு நமக்கு இலக்கிய சான்றுகள் கிடைத்தாலும் , அண்ணாமலையார் கோவிலில் பதிவாகியுள்ள முதல் கல்வெட்டு சான்றாக கி .பி 885  ஆம் வருடத்திய கல்வெட்டே ஆகும். இது  முதலாம் ஆதித்தனின் பதினான்காம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு. இதன் பின்னர் வந்த பராந்தக சோழர் , கன்னர தேவர் , ராஜ ராஜ சோழரின் அண்ணன் ஆதித்ய கரிகாலன் என்று வரிசையாக ஆண்ட சோழ மற்றும் ஹொய்சாள , பாண்டிய , விஜயநகர , நாயக்கர் காலத்திய ஏராளமான கல்வெட்டுகள் அடங்கி மிக பெரிய தகவல் களஞ்சியமாக இக்கோயில் விளங்குகிறது. தமிழ் மற்றும் அல்லாது தெுலுங்கு கல்வெட்டுக்களும் ஏராளம்.

இலக்கிய சான்றாக நமக்கு கிடைப்பவை திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் காலத்தில் பாட பெற்ற பதிகங்கள் தான் . கோவில் ஏழாம் நூற்றாண்டிலே இருந்தமையை உறுதி படுத்த இப்பதிகங்களே துணை.

மூலவர் அண்ணாமலையாரே :

சீர்காழி பதி தோன்றிய திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பல தலங்களில் உள்ள இறைனை தரிசித்து பதிகங்களாக பாடியுள்ளனர். சேக்கிழார் அவர்கள் இவற்றை எல்லாம் திருமுறைகளாக தொகுத்து உள்ளார். அதில் முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்மந்தர் பாடல்களும் , அடுத்த மூன்று அப்பர் பாடல்கள் என்று வரிசைபடுத்தியுள்ளார்.

முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் அவர்கள் திருவண்ணாமலை வந்தடைந்து இங்கே வீற்றிருக்கும் ஈசனை பின்வருமாறு பாடுகிறார்.

"உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே"

இது மட்டும் அல்லாது அவர் பாடிய 20  பாடல்களிலும் "அண்ணாமலை" என்றே  குறிப்பிடுகிறார். இதன் மூலம் சம்பந்தர் காலத்திலே இறைவனை அவர் "அண்ணாமலையார்" என்று  குறிப்பிடுவது  மிக தெளிவாக பதிவாகியுள்ளது.

இதை போல அப்பர்  பெருமானும் , தனது பதிகங்களில் இத்தல இறைவனை "அண்ணாமலை" என்றே  பதிவு செய்து உள்ளார்.

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

இவறுக்கு பின்னால் வந்த மாணிக்கவாசக பெருமானும் திருவண்ணாமலையில் திருவம்மானையும் திருவெம்பாவையும் அருளி செய்து , தனது "போற்றி திரு அகவலில் " இத் தலத்து உறையும் இறைவனை அண்ணாமலை என்றே பதிவு செய்து இருக்கிறார்.

அண்ணா மலையெம் அண்ணா போற்றி

இப்படி அண்ணாமலையார் என்ற பெயர் ஏழாம் நூற்றாண்டு முதலே வழங்கப்பட்டு இன்றுவரை வழக்கில் இருந்து வருகிறது.

பள்ளிப்படை :

பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும். மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் படைத் தளபதிகள், புலவர்கள் போன்றோர்க்கும் பள்ளிப்படைகள் அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

கற்காலம் தொட்டே இறந்தவர்கள் நினைவாக கற்திட்டை , கற்பதுகை , குத்துக்கல் , கல்வட்டம் என்று வெவ்வேறு வடிவில் மூத்தோர் வழிபாடு இருந்து வந்த நிலையிலும் , அது கோவில் வடிவிலான வழிபாட்டு முறை சோழர்கள் காலத்தில் தான் எழுச்சி பெறுகிறது.

இதுவரை நமது தமிழகத்தில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சில பள்ளிப்படைகள் விவரம் பின் வருமாறு :

1  முதலாம் ஆதித்ய சோழன் - தொண்டைமானாடு
2 .அரிஞ்சயர் சோழன் - மேல்பாடி
3 .கங்க மன்னன் 'பிருத்துவீபதி' - திருப்புறம்பியம்
4 .பஞ்சவன் மாதேவி - பட்டீஸ்வரம்
5 . சுந்தர பாண்டியன் - பள்ளிமடம்

இப்பள்ளிப்படைகளில் காலத்தில் முந்தையது , முதலாம் ஆதித்தனின் தொண்டைமானாடு பள்ளிப்படையே. இது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது ஆகும்.

அண்ணாமலையார் மூலவர் சமாதி அல்ல :

இடைக்காடர் சமாதி மீது தான் அண்ணாமலையார் லிங்கம் அமைந்து இருக்கிறது என்ற செய்தி முற்றிலும்  பொய்யானது. ஏன் என்றால் பல்லவர்கள் வீழ்ந்து சோழர்கள் எழுச்சி பெரும் காலத்தில் தான் பள்ளிப்படைகள் எழுப்பப்படுகிறது. ஆனால் முதலாம் பள்ளிப்படையான் ஆதித்யன் பள்ளிப்படை கட்டுவதற்கு 200  வருடம் முன்னரே 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தரும் , அப்பரும் மிக தெளிவாக "அண்ணாமலையார்" என்று பதிவு செய்து உள்ளனர்.

மேலும் இந்த உலகமே அறிந்த ஒரு விசயம் அண்ணாமலையார் "சுயம்பு" லிங்கம் என்பது. இத்தலத்து லிங்க பானத்தின் காலத்தை கணிப்பது சற்று கடினமே. அப்படி இருக்க , சமாதியின் மீது லிங்கம் நிறுவப்பட்டுள்ளது என்று சொல்வது நகைப்புகுறியது.

முதல் மற்றும் இரண்டாம் பிரகாரம் :

கருவறைக்கு வட மேற்கு மூலையில் ஆறுமுகர் சந்நிதி அருகே  உள்ள மூடப்பட்ட சதுர அறையில் இடைக்காடர் உடல் கிடத்தப்பட்டது என்றும் , மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபம் தான் "இடைக்காடர் சமாதி" என்றும் , அண்ணாமலையார் மூலவர் லிங்கமே "இடைக்காடர் சமாதி" மீது தான் அமைந்து உள்ளது என்றும் மூன்று வித முரணான கருத்துக்களும் ஆதாரமற்றது.

சுமார் 100  வருடங்கள் முன்னர் நடைபெற்ற நகரத்தார் திருப்பணியின் பொழுது கோவிலின் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் மிக பெரிய கட்டுமான மாற்றம் நடைபெற்று உள்ளது. கருவறையை முற்றிலுமாக பிரித்து மீண்டும் கட்டி உள்ளதற்கு அசைக்க முடியாத ஏராளமான சான்றுகள் உள்ளது. இன்றைய  கருவறையின் அதிட்டானம் குமுத பட்டை வரை மட்டும் தான் பழைய கட்டுமானம் . குமுத பட்டை மேல் உள்ள யாழி வரிசையில் இருந்து கருவறை விமானம் வரை அனைத்தும்  புதியதே . அதே போல் தான் இரண்டாம் பிரகாரமும் முற்றிலுமாக மாற்றி திருப்பணி செய்ய பட்டுள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த சதுர பகுதி என்பது , சமீபத்தில் ஏற்படுத்த பட்டவையாகவே இருக்க கூடும்.

எதுவாகினும் , அதன் உளளே  என்ன இருக்கிறது என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டியது அறநிலையத்துறையின் கடமையாகும். அப்பொழுது தான் பலரின் அனுமானங்களுக்கு விடை கிடைத்து சர்சைகளுக்கு முற்று  புள்ளி வைக்க கூடும்.

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபமும் காலத்தில் பிந்தியவை தான். அது விஜயநகர் /நாயக்கர் காலத்தியது.

ஆகவே , அண்ணாமலையார் கோவில் மூலவர் சமாதி மீது அமைந்தது அல்ல. கோவில் உருவான தினத்தில் இருந்து சைவத்தின் நிலமாக தான் இயங்கி வருகிறது. இது வரை இடைக்காடர் பற்றிய  ஆதார பூர்வ சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில் , அண்ணாமலையார் கோவிலை "இடைக்காடர் " சமாதி என்று கோருவது அபத்தம். அவரின் பாடல்களை தாண்டி அவர் பிறப்பு/ இறப்பு சம்மந்தமான எந்த வித இலக்கியம் மற்றும் கல்வெட்டு சான்றும் இல்லாமல் வெறுமனே இடைக்காடர் சமாதி என்று கோருவது மிக தவறு.

திருவண்ணாமலை சைவ தலமே:

இடைக்காடர் சமாதி என்று கூறுவது போல , மேலும் ஒரு ஆதாரமற்ற தகவலை வைத்து திருவண்ணாமலை தலத்தை வைணவ தலமாக கோருவது மிக அபத்தம்.

இன்றைய பிரம்ம  தீர்த்தத்திற்கு , முன்னாளில் "பெருமாள் தீர்த்தம் " என்று பெயர் இருந்ததற்கான சான்றுகள் இல்லாத பட்சத்தில் , புரவி மண்டப விதான "ராமாயண" ஓவியங்களை வைத்து இது வைணவ தலமாக இருந்து சைவ தலமாக மாற்றப்பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகமும் மிக தவறு.

விஜயநகர மற்றும் நாயக்கர்கள்  வைணவத்தை பின்பற்றியவர்கள் என்பதால் அவர்கள்  காலத்தில் பெரும்பாலும் வைணவம் சார்ந்த ஓவியங்களையே அணைத்து கோவில்களிலும் வரைந்து வந்துள்ளனர். அது போல தான் இங்கும் ராமாயண ஓவியங்கள் வரைந்து உள்ளனர். அதே விஜயநகர காலத்தில் தான் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிவ ரூபங்கள் அடங்கிய பல ஓவியங்கள் வரைய பட்டு உள்ளது.

இங்கு மூலவருக்கு பின்னால் உள்ள வேணுகோபாலர் சந்நிதி பெரும் சர்சைக்கு உள்ளான ஒன்று என்பதில் ஐயம் இல்லை. வேணுகோபாலரே சில நூற்றாண்டுகள் முன்னர் தான் கோவிலுக்குள் நுழைந்தார் என்ற உறுதிப்படுத்தாத தகவலும் உண்டு. ஏழாம் நூற்றாண்டு முதல் சைவத்தின் பீடமாக திகழ்ந்ததற்கு எல்லா ஆதாரங்கள்  இருந்தும் , எந்த ஆழமான ஆதாரமும் இன்றி இதனை வைணவ தலமாக இருந்திருக்கலாம் என்று கற்பனையில் கூறுவது ஏற்று கொள்ள இயலாத  ஒன்று. எதுவாகினும் வேணுகோபாலர்  குறித்து ஆய்வுகள் நடத்த படவேண்டும். எக்காலகத்தில் , எக்  காரணத்திற்காக வேணுகோபாலர்  உள்ளே நுழைந்தார் என்பது ஆராய பட்டால் தான் உண்மை வெளி கொணர முடியும்.

அதேபோல பிரெஞ்ச் ஆவணங்களில் கூறபட்டுள்ள விக்கரமபாண்டீஸ்வரர் இருக்கும் இடத்தில் , கட்டுரையில் கூறபட்டுள்ளது போல எந்த ஆஞ்சநேயர் சிலையும் இன்று இல்லை. எனவே இல்லாத ஒரு சிலையை இருக்கிறது என்று கூறுவதில் மிக பெரிய முரணும் சந்தேகமும் எழுகிறது.

இப்படி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் , அனுமானத்தில் சிலர் கூறும் கருத்தை கொண்டு ஆதார பூர்வத்துடன் பல நூற்றாண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கும் மிக பெரிய சைவ தலத்தின் புனித தன்மையை கெடுப்பது ஏற்று கொள்ளப்பட முடியாத விஷயம்.

திருவண்ணாமலை கோவில் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்று , பல லட்சம் பக்தர்களை ஈர்த்து கொண்டு இருக்கும் பட்சத்தில் , இது போன்ற ஆதாரமற்ற செய்திகளால் அண்ணாமலையாரின் பக்தர்கள் மனம் புண்படுகிறது. அண்ணாமலையார் கோவில் சாதி , மதம் , கலாச்சாரம் கடந்து உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவான கோவில். இதனை தனி நபரோ ,இல்லை குழுவோ தங்களுக்கு சாதகமா பயன்படுத்த நினைப்பதை அந்த அண்ணாமலையார் கூட மன்னிக்க மாட்டார்.


Monday, May 18, 2015

இவளும் கடந்து போவாள்

கலை ரசனைக்கு ஊடே காதல் ரசனை...

_________________________

கள் குடித்த போதை கூட தீரும்
அவள்
கண் கொண்ட போதை தீராது

சந்தன சாந்தின் சுந்தரம் சாய்ந்துவிட்டான்
அவள்
செவ்விதழின்  சௌந்தர்ய புன்னகையில்

காவிரி கூட வெட்கி நானுகிறாள்
அவள்
கன்னக்குழி ஒர குழியை பார்த்து

சுகம் அது என்ன விலை என்றால்
அவள்
சுட்டி தன பேச்சில்பொழுதை கழிப்பது என்பேன்

மோட்சம் அது அடையும் வழி கேட்டால்
அவள்
மோதிர விரலால் குட்டுபடுவது என்றுரைப்பேன்

மோகம் வந்து கூலி  கேட்டால்
அவள்
மேகமது கூந்தலை  கொய்து கழிப்பேன்

யாரோ ஒருவன் பறிக்கும் பூவிற்க்கு
யானோ தினமும் காத்திருக்கிறேன்

மனம் வீசும் மல்லிகை என்பதால்
மனையாளாய் நினைத்து மார்பில் சூடுகிறேன்

காலமோ என்னை கயவனாக்கியது
கன்னியின் காதலை சொல்லவிடாமல்

இவள் கடந்து போவாள் நிச்சயம்
நினைவுகளில் ஆறா வடுவை  ஏறுபடுத்தி விட்டு

நானும் கடக்கிறேன் இவளை வழியின்றி
கண் குடுத்த போதையே போதும்  என்று

நீ என்னுள் நிஜபடுத்திய
உன் நினைவுகளை என்றும்
பிரியாத வரம் வேண்டி
பிரிகிறேன் இந்த பித்தன்

"பித்தா பிறை சூடி பெருமானே .." என்று  பரமனை பாடி தொழுதிட

Sunday, April 19, 2015

பயண வழி கட்டுரை - ராமேஸ்வரம் நோக்கி (பகுதி 4)

சுட்டெரிக்கும்  வெயிலில் சுறுசுறுப்பு இல்லாமல் கதை பேசி கொண்டு அங்கு இருந்த பூம் பூம் மாட்டை வேடிக்கை பார்த்து கொண்டு போக , வழியில் போனவர்கள் எங்களை "எருமை மாடாய் " நினைத்து கொண்டனர்!

ஒரு வழியாக திருக்கோவில் திருவாயிலை அடைந்து , கோவிலுக்குள் உள்ள 21 தீர்த்தங்களில் நீராடுவதற்கு ரசீதை பெற்று கொண்டோம். கூட்டம் சற்று அதிகமாவே இருந்ததால் நீர் இறைத்து ஊற்றும் ஊழியரிடம்  இருந்து தப்பித்து கொண்டோம் , ஆம் லஞ்சத்தில் இருந்து தான்.

ஒவ்வொரு தீர்த்தமாக ஆரம்பித்தோம் , கூடவே எங்கள் அதி புத்திசாலி தனமும் பயண பட்டது. ஆம் தீர்த்தத்தின் பெயர் அதன் அமைப்பு என்று வரிசை படுத்தி கொண்டு 6 தீர்த்தங்களை கடந்தோம்.

ஏழாவது தீர்த்தமான "கவட்ச தீர்த்தத்தை" நெருங்கும் பொழுது கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. வரிசை இல்லாமல் மக்கள் முண்டி அடித்து கொண்டு இருந்தனர் . நாங்கள் சற்று நேரம்  நின்று பார்த்தோம் , கூட்டம் ஒழுங்கு படுத்தபடும் என்று , ஆனால் அதற்கான அறிகுறிகள் ஒன்றும் தென்படவில்லை. எனவே சராசரி இந்தியனாய்  நாங்களும் மாறி "தீர்த்தத்தை" நெருங்கினோம் . ஏனோ என் அப்பன் அருள் அந்த கூட்டத்திலும் எங்களுக்கு நன்றாக இறைத்து மூன்று முறை ஊற்றினார் அந்த ஊழியர்.

அவர் நீர் ஊற்றும் பொழுது தெரியாது எனக்கு , இது "ஆடு வெட்டும் முன் ஊற்ற படும் மஞ்சள் நீரை போன்றது என்று". அது சரி அப்படி எல்லா ஆட்டுக்கும் தெரிந்தால் அது ஏன் வெட்டு பட போகுது கோவில்களில்.
கூட்டத்தை விட்டு கஷ்ட பட்டு வெளியே வருகையில் , எதிர் பாரா விதமாக ஒரு பெண் நீரில் வழுக்கி கீழ் விழும் தருவாயில் எனது தோளில் தஞ்சம் புகுந்தால். ஏதோ நமக்கு தெரியாமலே நாம்  உதவினோம் என்பதை மட்டும் நினைத்து மனம் குளிர அருகில் அடுத்த தீர்த்தத்தை நோக்கி கண் மட்டும் ஓடியது.

இதற்குள்ளாக தான் ராஜேஷ் பலமாக சிரித்தான் . நான் கூட கூட்டத்தை பார்த்து சிரிக்கிறான் என்று அமைதியாய் இருந்துவிட்டேன். சிரிப்பை நிறுத்தாமல் வழியில் நின்று விட்டான். நான் நேரமாகிறது என்று கடிந்து கொண்ட பொழுது தான் , அவன் என் தோளில் சாய்ந்து காதோரம் ரகசிய பேசுவதை போல உரக்க கத்தினான்.

ராஜேஷ் சுட்டி காண்பித்த திசையும் , உரக்க சொன்ன ரகசியமும் வேற எதுவும் அன்று .... "கூட்டத்தில் என் தோள்களை பற்றிய பெண் தான் அது , அதுவும் காலையில் கருப்பு நிற உடையில் பார்த்த அதே பெண் தான் .... அந்த குடும்பம் மொத்தமும்  அங்கே நின்று கொண்டு இருந்தது ...". இது தானே சத்திய சோதனை ... அங்கே தொடங்கியவர்கள் ஏழு, எட்டு ...என இருபத்தி ஓராம் தீர்த்தம் வரை ஒன்றாகவே நீராடல் செய்தோம். அவர்கள் யாரோ , நாங்கள் யாரோ என்று தான். எங்கள் கவனமும் அவர்கள் மீதும் சற்று குறைவாகவே இருந்தது , காரணம் கோவிலின் கட்டுமானத்தை பற்றி பேச்சு இருந்ததால்.

இருபத்தி இரண்டாம் தீர்த்தமான "கோடி தீர்த்தத்தில்" அந்த குடும்பத்தை தொலைத்தோம். மனம் முழுதும் ஈசனை பற்றிய சிந்தனை புரை ஓடி இருந்தது. மூலவரை  நெருங்கும் பொழுது நீண்டு நிறைந்து கூட்டம். தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றோம். கிட்டதட்ட அரைமணி நேரம் காத்து இருப்புக்கு பின் , சாமி தரிசனம் கிட்டியது. கூடவே அம்மணியின் தரிசனமும் எதிர் வரிசையில் கிட்டியது. ஆம் அந்த பெண் மற்றும் குடும்பத்தார் 50 ருபாய் வரிசையில் நின்று வந்து உள்ளனர். சந்தர்ப்பவசம் நாங்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் நின்று ஈசனை காணும் படி ஆகிற்று.

நல்ல வேலை சிந்தனை ஈசனிடம் இருந்தாதால் , அடுத்து அம்மன் சந்நதி நோக்கி ஓடினோம் . திவ்ய தரிசனத்துக்கு பின் "ரங்கனையும்" "மதுரை வீரனையும் " சேவித்து விட்டு வெளியே வந்தோம் .

எதற்கும் எடக்கு பேச்சு பேசும் நாங்கள் ,செயலும் அவ்வாறே செய்ய திட்டமிட்டு , ராமேஸ்வரத்தின் பெருமைமிக்க "நீண்ட பிரகாரத்தை"  வலமிருந்து இடமாக சுற்றி வந்தோம்.

காலை நேரம் என்பதால் , சற்று குளுமையாகவே  இருந்தது அந்த நீண்டு நிறைந்த பிரகாரம். சேதுபதி மன்னர்கள் தான் எத்தனை பெரிய கொடை வள்ளல்கள் , ஆதலால் தான் இப்படி ஒன்று இன்றும் சாத்தியமாய் நின்று கொண்டு இருக்கிறது என்று இலக்கிய வசனம் பேசி விட்டு , கோவிலை விட்டு வெளியே கிளம்பினோம்

வரும் வழியில் எங்களால் பார்க்க முடிந்தது , எப்படி கூட்டம் அலை மோதுகிறது என்று . சற்று நாங்களும் தாமதித்து இருந்தால் , இந்த கூட்டத்தில் ஒருவராய் தான் இருந்து இருக்க கூடும் .

ஒரு பெரிய வணக்கம் செலுத்திவிட்டு வெளியே வருகையில் தான் சட்டென்று வெயில் முகத்தில் பட்டு , "வாடா மகனே வா ... இப்பொழுது பேசு உன் வசனத்தை என்பது போல் சுள் என்று வீசியது ..". எப்படியோ கரகாட்டம் ஆடி கொண்டே மீண்டும் அக்னி தீர்த்தத்தை அடைந்தோம் (காலில் செருப்பு இல்லை என்பதை  நியாபக படுத்தி கொள்ளுங்கள் வாசகர்களே ).

ஒரு வழியாக  உடை மாற்றி விட்டு , பையை எடுத்து கொண்டு கிளம்பி மீண்டும் கோவில் வாசல் அருகே வருகையில் மணி 9 20 ஆகி விட்டது. சரி தனுஷ்கோடி போகலாம் என்று கூறி விட்டு நண்பனின் முகத்தை பார்த்தேன் . ஒன்றும் பேச தோணவில்லை , அடுத்த நிமிடம் கண்கள் "உணவகத்தை " தேட ஆரம்பித்தது. பசி மயக்கத்தில் இருந்தவனிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி அவர்களுடன் சேர்ந்து நாமும் உண்வது தான்.

அருகில் இருந்த கடையில் காலை உணவை முடித்து கொண்டு வெளியே  வருகையில் நேரம் 10 05. சூரியன் மேலும் வீரியம் அடைந்து அனலை கக்க தொடங்கினான். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் இரண்டாம் எண் பேருந்து "தனுஷ்கோடி" போகும் என்று தெரிந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தை பார்க்கும் பொழுது தான் புரிந்தது , நமக்கு முன் நிறைய பேர் காத்து கிடப்பது.

"இந்த கூட்டத்தில் போகனுமா தம்பி ..?" என்று ராஜேஷ் வினவ , போயே தீரனும் என்று கூறிய பதிலில் இருந்து புரிந்து கொண்டான் ராஜேஷ். எப்படி பசி மயக்கத்தில் இருபவனை தடுக்க முடியாதோ , அதே போல் பயனிகனை தடுத்தல் முடியாது என்று .

சரி வா என்று ராஜேஷ் சொல்ல இருவரும் பேருந்து  நிறுத்தத்தின் அருகில் நிறுத்த பட்டு  இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பையை வைத்து விட்டு நின்றோம் .

அப்படியே  சோம்பல் உடலில் பரவ , நின்று கொண்டு இருந்த நான் மெல்ல வண்டியின் மீது சாய்ந்து நிற்க தொடங்கினேன். பேச்சு மீண்டும் எங்கயோ ஆரம்பித்து எங்கயோ பயணித்து கொண்டு இருக்கையில் , ராஜேஷ் விரல்களால் என்னை தீண்டி "கண்களால் சமிஞ்சை" காட்டினான்.

நானும் அப்பொழுது தான் உணர ஆரம்பித்தேன் , என் கைகள் மீது ஏதோ பொருள் படுவது போன்று. ராஜேஷ் சமிஞ்சை செய்த திசையும் , நான் உணர்த்த திசையும் ஒன்றே . சற்று அப்படியே  என் பார்வையை செலுத்தும் பொழுது கண்களில் பட்டது "ராஜ் மஹால் " துணிக்கடை மூங்கில் பை. அதில் பொரிக்க பட்டு இருந்த மதுரை என்ற வாசகம் மீண்டும் எங்கயோ  கூட்டி சென்று இன்பத்தை கூட்டியது.

மீண்டும் என் கவனத்தை ராஜேஷ் மீது செலுத்தி பேச தொடங்கினேன் . ஆனால் இம்முறை அவன் முகத்தில் குறும்புடன் சேர்ந்த கோவம் தெரிந்தது . சரி நண்பன் முகம் சிவக்கும் வன்னம் நாம் சமத்தாய் தவறு செய்தது என்ன என்று திரு திரு என்று விழித்து கொண்டு இடது புறம் திரும்பி பார்க்கும் பொழுது எனக்கு "ஓர் அதிர்ச்சி" காத்து இருந்தது .

ராஜேஷ் முகம் சிவந்தது நியாமே என்று என் தவறை ஒத்து கொண்டேன் மனதினுள் .

கிட்டதட்ட 2 மணி நேரம் இடை வெளிக்கு பின் மீண்டும் "அந்த குடும்பம் " இணைந்தது. ஆம் நாங்கள் சந்தித்த அந்த "திவ்யா குடும்பம் " தான்.  வெட்கம் ஒரு புறம் பிடிங்கி தின்ன , ராஜேஷ் வாய்குள்  வசை பாடினான் . அது வரை சிம்ம குரலில் பேசிய எனக்கு , அதன் பின் வாய் குழற ஆரம்பித்தது. சில நிமிடங்களில் பேச்சும் நின்று போனது. ஒரு 5 நிமிட நிசப்தத்துக்கு பிறகு , அதை ஒரு குரல் உடைத்து எரிந்தது..

"தம்பி ... தனுஸ்கோடி பஸ் எத்தனை மணிக்கு வரும்னு தெரியுமா...."

ஆம் திவ்யா வின் அப்பா தான் அது ...

சற்றும் தாமதிக்காமல் . "தெரியலிங்க ..இங்க தான் வருமா 10 15 நு சொன்னாங்க... நில்லுங்க  திருப்பியும் கேட்டுட்டு வரேன் .." என்று பதில் கூறினேன்.

சொல்லி கொண்டு இருக்கையில் , இரண்டாம் என் பொறித்த பேருந்து வந்து நின்றது. ராஜேஷ்கு பழக்கம் இல்லாததால் , நான் தான் சீட் பிடித்தாக வேண்டும்.

யாத்ரிககர்கள் , உள்ளூர் வாசிகள் என்று அணைத்து பெருமக்களும் அந்த ஒற்றை வண்டியை சின்னாபின்னம்  ஆக்கினர். கூட்டத்தில் அடித்து பிடித்து வழக்கம் போல் "நடத்துனர்" இருக்கைக்கு பின் இருக்கையை பிடித்து உட்கார்ந்தேன். அந்த கூட்ட நெரிசலில் ஏறமுடியாமல் ஏறி சிரம பட்டு உட்கார்ந்தான் .

எங்களுக்குள் சிறு அமைதி இருந்தது , காரணம் "பேருந்தினுள் இருந்த அனல் காற்று". ஒரு வழியாக நடத்துனர் விசில் அடிக்க பேருந்து கிளம்பியது. கோவில் வளாகத்தை விட்டு சற்று தள்ளி சென்ற பொழுது தான் லேசாக சில்லென்று காற்று வீசியது.

ஜன்னல் வழியாக வழக்கம் போல் கற்றலை  தொடங்கிய  பொழுது , ராஜேஷ் நடுத்துனரிடம்  "தனுஷ்கோடி" கு பயண சீட்டு வாங்கி கொண்டு இருப்பது காதில் விழுந்தது . அதற்குள்ளாக பேருந்தும் ராமேஸ்வரம் நகரை விட்டு வெளியே பயண பட்டு கொண்டு இருந்தது.

அனல் முற்றிலும் அடங்கி , குளுமை காற்று  வீசிக்கொண்டு இருந்தது. பரபரப்பு அணைத்து அடங்கி பேருந்தும் அமைதியை நோக்கி பயணப்பட்டது.

வேடிக்கை பார்த்து வந்த என்னை , தீண்டி மீண்டும் "புண் முறுவல் " புரிந்தான் . இம்முறை சற்று சீக்கிரம் புரிந்து கொண்டேன் ...

மகேந்திர வர்மன் ஆன்மாவின் குரல்

அழகிய சோலை ஒன்றும் பெரிதாய் இல்லை , ஆனால் மிக பரந்து விரிந்த கழனி பூமி. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சை பசேல் என்று பரந்த விரிந்த நெல் வயல். வானம் பார்த்த பூமியாய் போகவில்லை , இன்னும் மழை துளிகள் சற்று அவ்வ பொழுது எட்டி பார்கிறது.

பல்லவ தேசத்தின் தலைநகரமான "காஞ்சி" நகரின் தெற்கே ஓடும் பாலாற்றை கடந்து சிறிது தூரத்தில் அமைந்த ஊர் தான் அது , ஆம் திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட "மாமண்டூர்" கிராமம். காஞ்சிபுரம் - வந்தவாசி பிரதான சாலையில் அமைந்த ஊர் தான் அது. வயல்வெளியும் , ஊரும் ஒருசேர அமைந்த ஊர்.

நம் தேசத்தின் பரவலாக காணப்படும் "கிராமத்து தேவதை" வழிபாடு சேற்றில் ஊன்றிய நாற்றாக மக்கள் மனதில் நன்றாய் ஊன்றி  இருக்கிறது.

சித்திரை அம்மாவாசை ஒட்டி கிராமத்து தேவதைக்கு எடுக்கும் முக்கிய விழா கொண்டாட்டத்தில் கிராமமே திளைத்து கொண்டு இருந்தது.

இளம் காளையர்கள் தத்தம்  தம் கூட்டத்தினரோடு , இடி முழங்கும் "பேண்ட் வாத்தியத்திற்கு" இணையாக "நிஜ கிராமத்து தேவதைகளான - இளம் பெண்களை" கவரும் வன்னம்  குத்தாட்டம் ஒரு புறம் அரங்கேற , பேண்ட் வாத்திய சத்தத்திற்கு ஈடு கொடுக்க முடியாத பாவ பட்ட  "ராஜ மேளம் " முனங்கி கொண்டே அம்மனுக்காக வாசித்து கொண்டு இருப்பதில் இருந்து அதன் தவிப்பை நன்றாக உணர முடிந்தது. "ஏதோ" , இல்லை "யாரோ" ஒருவரின் கட்டாயத்தின் பேரில் "ராஜ மேளங்களின்" உயிர் பல ஊர்களில் ஊசலாடுவதை போன்ற அதே தவிப்பு தான்.

பெரும்பாலும் கிராமத்து திருவிழாக்கள் "மாலை தொடங்கி , நடு இரவு வரை " கொண்டாட படுவதால் , இருள் மிக உற்ற துணையாகவே இருக்கிறது நம் "குடிகார சகாக்களுக்கு". கிராமம் என்பதால் தெரு விளக்குகளே உண்டு. தெரு விளக்கின் வெளிச்சம் படரும் இடம் ஒன்றும் பெரிய அளவில் இருக்காது என்பதால் , சாலை ஓரமே குடிக்கு போதுமான இடமாக தேர்வு செய்ய படுகிறது. இங்கே ஏற்ற படும் சுதி தான் , மேல கூறப்பட்ட "பேண்ட் வாத்தியத்திற்கு" இணையாக செயல் படுகிறது .

இப்படி ஒரு புறம் கூத்துக்கள் நடந்தேற , இனொரு புறம் நாட்டின் பாரம்பரியமான கூட்டு குடும்பத்தின் எச்சங்கள் கோவிலை நோக்கி எதிர் படுகிறது. ஏதோ தை அறுவடையில்  கிடைத்த லாபத்திற்கு ஏற்ப குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் புது துணி எடுத்து கொடுத்து , ஏதாவது "பிராத்தனை" இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்து ஒரு வழியாக மொத்த லாபத்தில் பாதியை வேட்டடித்து விட்டு , அந்த மன சுமையை ஒன்றும் வெளியில் காட்டி கொள்ளாமல் வீட்டின் பெரியவர் வாசலுக்கு வந்து குரல் எழுப்பி அணைத்து குடும்ப உறுப்பினரையும் அவசர படுத்தும் "ஆண்மை" தனம் தரும் உணர்ச்சி சந்தோசம் வேறு எதிலும் அந்த ஆணிற்கு தோன்றாது.

புது மருமகள் தலையில் "மாவிளக்கு" கூடையை தூக்கி வைத்து விட்டு தானும் துணைக்கு பிடித்து கொண்டு வரும் மாமியார் , அப்பாவிடம் "செலவுக்கு காசு எடுத்து கொண்டாரா " என வினவும் தமையன் . திருவிழா பொம்மை கடையை பார்த்ததும்  சித்தப்பா தோள்களில் இருந்து தாத்தா  வின் தோள்களுக்கு மாறும் பேரபிள்ளை. இது தான் சமயம் என்று பிள்ளையை குடுத்த உடன் முறை பெண்ணை தேடி "அலைபாயும்" ஓர பார்வை ...என கோவிலை அடைந்து ஒரு புறம் குடும்பங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றும் குடும்பங்கள் ...

வயிற்று பிழைபிற்காக  எங்கெல்லாம் திருவிழா நடக்கிறதோ அங்கெல்லாம் "திருவிழா கடை" போட்டு , திருவிழா நாட்கள் முழுதும் தூக்கம் இன்றி சரியான உணவு இன்றி வியாபாரத்தை பார்க்கும் தொழிலாளர்களின்  கடைகள் வரிசையாக "கோவில் வீதியை அலங்கரிக்க "...

பக்கத்து கிராமங்களில் இருந்து வந்த பெரும் கூட்டம், சாமி பார்த்து விட்டு, நேரமே வீடு திரும்பும் அவசரத்தில் சாரை சாரையாய் நடந்து செல்ல ..

நான் பயணித்த பேருந்தும் தன பங்கிற்கு திளைத்து போய் இந்த திரு விழா சிக்கலில் சிக்கி தவித்தது , ஊரை விட்டு வெளியே போக முடியாமல் .

என் பேருந்தில் பயணித்த அனைவரும் ஒவ்வொரு காட்சியையும் அதன் பாணியில் ரசித்து வந்தனர் . ஆம் அம்மனை நெருங்கியவுடன் கன்னத்தில் போடுவதும் , பேண்ட் சத்தத்தில் ஆடுபவர்களை எக்கி எக்கி பார்ப்பதும் , சமயத்தில் "சாராய வாடை' ஜன்னல் வழியே  வருகையில் முந்தானை கொண்டு மூக்கை மூடிய பெண்கள் என்று பயணிகளும் பாதி திரு விழா கொண்டாடினர் ...

எனது கண்களை தவிர எதுவுமே அந்த 10 நிமிடம் என்னிடம் இல்லை என்பது தான் நிஜம். ஆம் அனைத்தும் ஒரு ஆன்மாவால் களவாட பட்டு இருந்தது ...

பல்லவ தேசத்தின் கலை பெட்டகம் என கூற பெரும் "குடவரை" , அவர்களின் கலை தாகத்தையும் , அறிவின் வெறிதனத்தையும்  தான் இன்று வரை சொல்லி வருகிறது . ஆனால் அதை கேட்க தான் யாருமில்லை ,எங்களை போன்ற ஒரு சில ஆயிரம் மனிதர்களை தவிர.

அது சரி நான் ஏன் இதை கூறுகிறேன் என்று தானே கேட்க விரும்புகிறீர்கள் ... இப்படி ஒரு கூத்தும் கொண்டாட்டமும் நடந்தேறிய அதே ஊரில் தான் பல்லவர்களின் மூத்தோன் , "மகேந்திர வர்மன்" பல்லவன் எடுபித்த அழகிய குடைவரைகள்  அமைந்து உள்ளது...

அந்த அந்தி சாய்ந்த பொழுதில், அழுது கொண்டே காத்து இருந்தவனாய் மகேந்திர வர்மனின் ஆன்மா , அந்த வழியே சென்ற என்னை கண்டதும் ஏதோ "திருவிழாவில் காணாமல் போன சிறு பிள்ளை , கூட்டத்தில் தனக்கு தெரிந்த ஒருவனை கண்டதும் ஓடி போய் கட்டி பிடித்து கொள்வது போல ... என்னை வந்து பிடித்து கொண்டான் ..."

அவன் ஆன்மா என்னுளே இருந்து கொண்டு , அவனின் அத்தனை புலம்பல்களும் என் புலம்பல்களாய் வெளி பட்டது ...

ஆயிரம் வருடத்திற்கு முன்னர் , இதே போல மக்கள் மகிழ்ச்சி களிப்பில் வாழ வேண்டும் என்று கலை கூடங்களை நிறுவினேன் , குடவரை வெட்டி , ஓவியம் வரைந்து ,வன்னம் தீட்டி "சமயம் வளர்த்தேன் ". அணைத்து கலைகளையும் ஒருங்கே ஊக்குவித்தேன். வரலாற்றில் நீங்கா இடமும் பிடித்து விட்டேன் , அழியா கோவில்களையும் குடைவரைகளையும் நிறுவி  இன்றளவும்  எனது பெயரும் உள்ளது , எனது படைப்புகளும் வாழுகிறது ... ஆனால் ஏனோ மக்கள் அதை மறந்து விட்டனர் ... அவர்களுக்கு அந்த குடவரை "கல்" ஒன்றும் பெரிதாய் செய்து விடவில்லை போலும் "லாபகரமாக", அதனால் தான் கால போக்கில் "குடைவரைகளை" கேட்பாரற்று விட்டு விட்டு , ஏதோ ஒன்றை  நம்பி இதே ஊருக்குள் நான்கைந்து கோவில்கள் கட்டி இன்று அதற்கும் விழா எடுகின்றனர் ... சரி விழா எடுத்து மக்கள் ஒற்றுமையோடு வாழ்தல் தானே நம் என்னம், அதை இந்த "கிராமத்து தேவதை" செய்கிறாளே என்று சந்தோஷ பட்டு கொள்ளும் விதமாக இல்லையே என்று தான் "மனம் கதறுகிறது".... ஆம் இந்த கூட்டத்தை நன்றாக உற்று பார்த்தல் எளிதாக புரிந்து விடும் ..

"கட்சி கொடிகளோடு ,பதாகை ..அம்மன் யாரென்று தெரியவில்லை ..."

"மஞ்சள் தொட்டு வைக்க வேண்டிய புது வேஷ்டிகளில் "கட்சி கரை "....."

"வாலிபர் சங்கம் வரவேற்பு என்ற பதாகையில் சினிமா நடிகையின் படம் ..."

இன்னும் ஏராளம் ...

காலம் மக்களை மாற்றுகிறது , தன் தேவைக்கு எதையும் ஆராயாமல் நம்புகிறது மனம்  .. இருக்கும் கலை கோவில்களையும் , கலை பெட்டகங்களையும் காப்பாற்ற வக்கில்லாத நமக்கு எதற்கு புதிய கோவில்கள் ...? அட கோவில்களுக்கு நிவந்தம் கொடுத்த நிலங்களையும் கொள்ளை அடிச்சாச்சு , கோவில்களிலும் சிலைகளையும் திருடியாச்சு , ... இனி இந்த குடைவரை போன்ற கலை பெட்டகங்களை வைத்து ஒன்றும் சம்பாரிக்க முடியாது என்று மக்கள் கை கழுவி விட்டனர் ...

ஆதலால் தான் ஊருக்குளே பல கோவிலையும் கட்டி , பல கோஷ்டிகளை உருவாக்கி ,  அதில் ஆட்சி அதிகாரம் என சம்பாத்தியத்தை வேறு வழியில் செலுத்தி வருகின்றனர் ... இது இங்கு மட்டும் அல்ல, நம் நாட்டின் அணைத்து ஊர்களிலும் பரவலாக காணப்படும் ஒரு அநாகரிக செயல்....

திருப்பதி  , திருவண்ணாமலை , மலையனூர் , மருவத்தூர் , ராமேஸ்வரம் என்று கோடிகளில் புரளும் கோவில்கள் நாட்டில் சிலவையே. அதை வெகுவாக நாடி செல்லும் பக்தர்களிடம் ஒரே கேள்வி , மீதம் உள்ள கோவில்களில் இருப்பது "இறைவன்" இல்லையோ???. மக்கள் வணிக மயமாக்க பட்ட கோவில்களை மட்டுமே தேடி சென்று "கொட்டி" வருகின்றனர் என்றால் அதுவும் ஒரு "வியாபார ஸ்தாபனம்"  ...

அவன் அவன் ஊர்களில் உள்ள கோவில்களை சிறப்பாக பராமரித்து வந்தாலே நல்ல இறை அருள் பெற்று , வளமோடு மக்கள் அணைத்து செல்வங்களையும் பெற்று  நல்ல சகோதரத்துவத்துடன் வாழ்வர்....

இதை எப்படி மக்களுக்கு புரிய வைப்பது என்று யோசித்து பார் , அத்தோடு நில்லாமல் அதனை செயலில் செய் என்று கூறி விட்டு மாமண்டூரை பேருந்து  தாண்டியவுடன் "மகேந்திரனின் " ஆன்மா என் உடலை விட்டு பிரிந்து சென்று மீண்டும் தன் குடைவரைக்குள்  தஞ்சம் அடைந்தது ...

Tuesday, March 24, 2015

பயண வழி கட்டுரை - ராமேஸ்வரம் நோக்கி (பகுதி 3)

ஒருவழியாக பாலத்தை கடந்து நிலபகுதியில் தொடர்வண்டி ஊர்ந்து சென்றது. அனைவரும் சற்று நேரத்தில் ராமேஸ்வரம் வந்து விடும் என்பதால்  தத்தம் தமது பைகளை எடுத்து வைத்து கொண்டு காத்து இருந்தனர்.

எங்களுக்கு மனசுமையை தவிர்த்து ஆளுக்கொரு சிறு பை மட்டுமே வைத்து கொண்டு இருந்தோம். ஒலிப்பான்களை அழகாக ஒலித்து கொண்டு ,சத்தத்தை சங்கீதமாய் மாற்றி கொண்டு வண்டி நிலையத்தை அடைய , பரபரப்புடன் இறங்கியவர்கள் மத்தியில் நிதானமாய் கீழ் இறங்கி சோம்பல் முறித்து கொண்டோம் இருவரும்.

நிலையத்தில் உள்ள குழாயில் முகம் கழுவி விட்டு , அங்கேயே பல்லும் துலக்கி விட்டு கூட்டத்தின்  கடைசி மனிதர்களாய் நிலைய வாசலுக்கு வந்தோம்.

அந்த விடிந்தும்விடியாத காலை பொழுது எங்களுக்கு நிச்சயம் உணர்த்தவில்லை , அன்று நடக்க  போகும் சம்பவங்களை.

(எளிதில் மறக்கமுடியாத பசுமை நினைவுகளை ஏற்படுத்தும் நாள் என்பது எங்களுக்கு அட் தருணத்தில் தெரியாமல் தான் போயிற்று . சரி உங்களை வேருபேத மனம் இல்லை வாசகர்களே , வாருங்கள் எங்களுடன் சேர்ந்து பயணிக்க .......)

பயணமே இனிதான் துவங்க விருக்கிறது...

இருள் மங்கி புற ஊதா நிறம் வானில் தென்பட துவங்கியது. நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகாமையிலே அமையபெற்று இருந்த பேருந்து நிறுத்தத்தில் "கிராமத்து குயில் " ஒன்று எங்கள் வருகைக்காக காத்து கொண்டு இருந்தது. ஆம் "கோவில் வாசல்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டு எங்களுக்காக காத்து கொண்டு இருந்தது ஒரு டவுன் பஸ். நெடுந்தூரம் செல்லும் பேருந்தில் முதல் இருக்கையிலும் , டவுன் பஸ்சில் கடைசி இருக்கையிலும் பயணிக்கும் வித்தியாச ஜாதி நான்.

விருவிருப்பாய்  சென்று வேகமாக இடம்பிடிக்கலாம் என்று சென்றால் , அங்கும் போட்டி. எங்களுக்கு முன்னமே சில வயதான வாலிபர்கள் மீன் கூடைகளுடன் உக்கார்ந்து கொண்டு இருக்க , எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சொல்லவா வேண்டும் , ராஜேஷின் நக்கலான சிரிப்பை. அது சரி என்ன செய்யமுடியும் கிடைத்து இருக்கையிலாவது  உட்காருவோம் என்று கடைசி இருக்கைக்கு முன் இரண்டு இருக்கையை குறிவைத்து நகர்ந்து சென்று அங்கே பையை வைக்கும் பொழுது பரபரப்புடன் ஒரு குடும்பம் பேருந்தில் ஏறியது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நான் கை வைத்து இருந்த இருக்கையில் கை வைத்து கொண்டு "அம்மா சீட் பிடிச்சிட்டேன் ..." என்று கூவ ஆரம்பித்தால்.

அட பாவமே , இது அதி காலை கொள்ளை என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கும் கணத்திலே ,கண்ணியமாக அந்த பெண்ணின்  அம்மா சற்று தொலைவில் நின்று கொண்டு...

"ஹேய் திவ்யா, இங்க இடம் இருக்கு டி ...இங்க வா ... அப்பாவ அங்க உக்கார சொல்லிட்டு வா ..." என்று அழைத்தால் ...

நிம்மதி  பெருமூச்சு விட்டுக்கொண்டேன்  ,காரணம் மீதி இரண்டு இடம்  உள்ளது , அது எங்களுக்கு தான் என்று ...

ஆரவாரம் அடங்கி அவர் அவர் இருக்கையில் அமர்ந்த போது தான் , அந்த பெண்ணின் முகத்தை தற்செயலாக திரும்பும் பொழுது பார்க்க நேரிட்டது

 அட இது நம்ம "....." மாதிரி ல இருக்கு என்று ராஜேஷ் சற்றும் இடை விடாமல் சொல்லி முடிக்க , என் மனம் ஆயிரம் ஈட்டிகள் வைத்து தைத்தது போன்று உணர்தேன் . விளையாட்டாக பேசி கொண்டு இருந்த ராஜேஷ் , என்னை மேலும் கிண்டல் செய்ய ஆரம்பித்தான். ஏதோ நினைவுகள் நெஞ்சினுள் ஓட , அதற்கு ஏற்றார் போல பேருந்தின் சக்கரமும் காலை கண்விழித்த துயரத்தில் "மெல்லமாக உருண்டு" சென்று கோவில் வாசலை அடைந்தது.

சேதுபதி மன்னர்கள் கொடையில் கட்டுவித்த மண்டபத்தை கண்கள் பார்த்ததும் எத்தனை எண்ணங்கள் மனதில் இருப்பினும் நொடி பொழுதில் மறைந்து .பயணத்தின் நோக்கத்தை மனமும் , சிந்தையும் அறிந்தது....

ராஜேஷை விறுவிறுப்பாக இறங்குமாறு அவசரபடுத்தி , அவனை அழைத்து கொண்டு வேகத்தை என் காலில் சற்று அதிகமாகவே காட்டினேன்.

நிச்சயம் எந்த நினைப்பும் அந்த பெண்ணின்  மீது  இல்லை. கருப்பு நிற சுடிதார் , அவளின்  முகம் மற்றும் அவள் பெயர் இது மட்டும் நன்றாக  பதிவாகி இருந்தது மனத்தில்.

விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வருவதற்கு முன்னரே சாமி தரிசனம் செய்து விடுதல் வேண்டும் என்பதால் , ராஜேஷை ஒரு டீ கூட குடிக்க அனுமதிக்கவில்லை. நேராக அக்னி தீர்த்தம் நோக்கி நடையை தொடங்கினோம் .
.
கடற்கரை அருகே ஒரு சிறு கடையில் , லாக்கர் ஒன்றை வாடகைக்கு எடுத்துவிட்டு அங்கே இருவரின் பை மற்றும் காலணிகளையும் வைத்து விட்டு வீராப்பாக குளிக்க சென்றோம்.

அதிகாலை மணி 6 , ஆதவன் கூட அன்று சோம்பேறித்தனமாய் வெளியில் வராமல் தூங்கி கொண்டு இருந்தான். எங்கள் இருவருக்குமே தண்ணி என்றால் சிறு வயதில் இருந்தே  பயம். குளிர்ந்த நீரில் இறங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே சில வினாடிகள் கழிக்கையில் ஆதவன் தோன்றினான்.

எங்கே சென்றாலும் எங்களுக்கு போட்டி என்பது இயல்பாகி போன ஒன்று . அது போல ஒரு போட்டியும் தோன்றியது, ஆனால் அது இம்முறை உலகை ரட்சிக்கும் ஆதவனிடம் .

எனக்குள்  ஒரு போட்டி மனப்பான்மை ஏற்பட்டது. "தாமதமாக வந்த நீ குளிப்பதற்குள்.."  , முதலில் வந்த நாங்கள் தான் நீரில் இறங்குவோம் என்று ராஜேசிடம் வீர வசனம்  பேசினேன். பதிலுக்கு பொது இடம் என்பதால் "நல்ல வார்த்தைகளில் திட்டி விட்டு .... "ஏன்டா உங்க ரெண்டு பேர் சண்டைக்கு நான் தான் கிடைத்தேனா ...." இந்த குளிரில் கடலில்  இறங்க சொல்கிறாயே என்று கடிந்து கொண்டான் ..."

ஒரு வழியாக அவன் நீருக்குள் இறங்க சம்மதித்த அதே வினாடியில் , பறந்து விரிந்து இருந்த அக்னி தீர்த்தத்தில் , பகலவன் தன பட்டொலியால் பறந்து விரிந்து தங்க பொன்னாடை கடல் அன்னைக்கு போற்றியது போன்ற அழகிய காட்சி அளித்தான். நிச்சயம் அது நினைவில் கொள்ளவேண்டிய பசுமையான காட்சி. ஒருவாறு இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சி , ராஜேஷ் என் மீது கொண்ட கோபத்தை கொஞ்சம் தீர்த்தது...

(இது தான் இயற்கையின் வலிமை )..

ஆனந்தமாய் ஒரு மணி நேரம் குளியல் போட்டுவிட்டு , அங்கு இருந்து வெளியே கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பலானோம். ஆதவன் சுட்டெரிக்கும் பொன் கிரனகளால் வழி அனுப்பி வைத்தான் என் ஈசன தரிசனத்திற்கு.

தீர்த்தத்தை விட்டு வெளிய வந்தவுடன் , எங்களுக்கு குளிராமல் இருக்க ஈசன் கட்டளை படி எங்கள் நண்பன் ஆதவன் "சுட்டெரிக்கும்" அனலை வீசி எங்களுக்கு துணை புரிந்தான்.

பயண வழி கட்டுரை - ராமேஸ்வரம் நோக்கி (பகுதி 2)

ராஜேஷ் சற்று பருமனான தேகம் , மேலும் ரயில் பயணங்கள் (பொது பெட்டியில் பயணம் ) அவனுக்கு புதிதே. சற்று சிரம பட்டு அவனுக்கு விதிகளை கற்று கொடுத்தேன் , மேல் ஏறி படுக்க. முடிவில் நான் தூங்கவே இல்லை என்று மனம் மாறி விட்டான் பாவி .

2009 வாக்கில் சென்னை முதல் விழுப்புரம் வரையே மின்மயமான இருப்பு பாதை என்பதால் , விழுப்புரம் சந்திப்பில் இன்ஜினை மாற்றிவிட்டு , அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு , சரியாக 8 மணியை கடந்த பின்னர் வண்டி விழுப்புரம் சந்திப்பை விட்டு மெல்ல நகர்ந்தது.

எப்பொழுதும் எல்லா பயணங்களிலும்  உள்ள மன நிலை தான் , இயற்கையை ரசிக்க வழக்கம் போல் கதவருகே வாசம்  கொண்டேன்.  விழுப்புரம் நகரை விட்டு வெளிய சென்றதும் , இருளும் அதன் கூடவே சில்லென வீசும் காற்றும் மனதை இதமாக்கியது.

மனதில் பரபரப்பு அடங்கி , சட்டென்று "விழுப்புரம் சந்திப்பில்" கண்ட காட்ச்கள் கண்களில் நிழலாடியது .ஆம்  நடைமேடை விட்டு கீழ் இறங்கும் பொழுது பார்த்த பெண்ணின் முகம், மின்னல் ஒளியை போல  நினைவுக்கு வந்தது. (சராசரி வாலிபனாக என்னை இங்கேயே  யாரும் என்ன வேண்டாம், என்னும் தருணம் வரும் பிற் பகுதியில் )

என்னை முதன் முதலாக என் பேச்சு திறமையை இனம் கண்டு , எனக்கு மாபெரும் மனிதர்களான சாக்ரடீஸ் , பிளாட்டோ போன்றோர் பெற்ற பட்டமான "தத்துவ ஞானி " என்ற பட்டதை "பட்ட பெயராக " சூட்டிய என் மரியாதைக்குரிய விரிவுரையாளர் மற்றும் என் அன்பிற்குரிய தமக்கை நிவேதிதா அவர்களின் முக சாயலை ஒத்து இருந்தது அந்த பெண்ணின் திருமுகம். கல்லூரி நாட்களில் அவ்வளவு உதவி செய்து எங்களின் எல்லா கஷ்டங்களையும் போக்கிய ஒரு தமக்கையின் நினைவு எப்படி அற்று போகும் ???

ஆம் நான் யோசித்து சுதரிபதற்குள் , நண்பன் ராஜேஷ் என்னருகே  வந்து நின்றான்.   "டேய் பிளாட்பாரம் விட்டு கீழ் இறங்கியவுடன் கவனித்தியா??? " என்றான்.

நண்பன் அல்லவோ , என் போல தான் சிந்தனைகள்  இருக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் சற்றும் தாமதியாமல் "மாமி மாறி ஒரு பொண்ணு போனாலே .." என்று இழுத்தேன்.

"ஆம் அவளே தான்.." என்றான் ராஜேஷ்....

"வண்டி ஏறும் அவசரத்தில் அவளை கவனிக்க வில்லை டா.." என்று நான் பதில் கூற , அவனுக்கே உரித்தான ஒரு புன் சிரிப்பு  சிரித்துவிட்டு நாங்கள் பை வைத்து இருந்த இருக்கைக்கு அடுத்த இருக்கையை கை காண்பித்தான்!

ஆம் அங்கே அவளே தான்!,

வாய் அடைத்து போனேன் வியப்பில். ராஜேஷ் தன் மொபைலை எடுத்து மாமி க்கு அழைத்தான். நலம் விசாரித்துவிட்டு எங்கள் பயண திட்டம்  பற்றி சொன்னான். வாழ்த்துக்களை கூறி விட்டு , பத்திரமாக போகும் படி அறிவுறித்திய எங்கள் தமக்கையிடம் , அந்த பெண்ணை பற்றி விவரித்தான்.

விரிவுரையாளர் என்ற உரிமையை விட தமக்கை என்ற உரிமை அவர்களிடத்தே ( நிவேதிதா) எங்களுக்கு இருந்தது  , எனவே வழக்கம் போல தன்னை கேலி செய்கிறார்கள் என்று அந்த பெண்ணை பற்றி கூறும் பொழுது  நம்ப மறுத்து விடவே எனக்கு கோபம் உச்சத்துக்கு போயிற்று (காரணம் தெரியவில்லை என் கோவம் வந்தது என்று ).

எங்களை நன்கு படித்து வைத்து இருந்த தமக்கை , கோபம் போட்டியாக மாறிவிடும் என்று உணர்த்த நிவேதிதா   அவர்கள் , என்னிடம் "நான் நம்புறேன் டே சாமி .." என சப்பை  கட்டு கட்டினார்கள்.

23 வயதே நிரம்பிய எங்களுக்கு பயம் எங்கே தெரியபோகிறது. விளையாட்டாக ஒரு வினையை செய்கிறேன் என்று அவர்களிடத்தே சபதம் செய்தேன். காலில் விழாத குறையாக "டேய் ..ஒழுங்கா ஊர் சுத்திட்டு ஊர் வந்து சேருங்க டா.." நு செல்லமாய் கடிந்து கொள்ள , நானும் அதனை கேட்பதாய் பொய் உரைத்தேன்.

சிறிது நேரம் ரயில் வண்டி பாடும் கீதத்தை , ராஜா அவர்களின் இசை பாடல்களோடு ரசித்து விட்டு , சரி வாடா சீட்டுக்கு போகலாம் என்று கூறிய வார்த்தையை  விநோதமாக பார்த்தான். அவனால் யூகிக்க முடிந்தது , நான் என்ன செய்ய போகிறேன் என்று.
அறிவுரைகளை கூறினான் , பயத்தின் வெளிபாடால். எதையும் கவனிக்காத  மனது அவன் மொபைலை மட்டும் பெறுவதில் மும்புரமாக இருந்தது.

(இன்னுமா வாசகர்களே உங்களால் யூகிக்க முடியவில்லை...???)

மொபைலை பெற்று கொண்ட நான் , அவள் அமர்ந்து  இருந்த இருக்கைக்கு நேர் எதிர பக்கவாட்டில் உள்ள ஒற்றை இருக்கையில் அமர்ந்தேன்.

கைகளில் கண்ணாடி வளையல் , காதோரம் சிறிய லோலாக்கு என்று அவள் நல்ல அழகான பெண்ணே!!!, இருந்த போதிலும் சபதம் மட்டுமே என் நோக்கம். பிற எந்த தீய எண்ணமும் என் மனதில் இல்லை.

அவள் தன் தம்பியுடன் வந்து இருந்தால். நிச்சயம் அந்த தம்பி பாராட்டுதலுக்கு உரியவன். அவனை போல் அணைத்து பெண்களுக்கு தம்பி இருந்தால் , எத்தருணத்திலும்  விசம தனமான ஆண்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றி  விடலாம். இப்பொழுதும் சொல்கிறேன் நான் விசமி அல்லன். தீய எண்ணங்கள் ஏதும் மனதில் இருந்தது இல்லை .

ஆம் மிகவும் சிரமப்பட்டு , அவளின் திருமுகத்தை "போட்டோ" எடுக்க முற்பட்டேன் . பிறகு என்னம் மாற்றி கொண்டேன்  , காரணம் , நாம் தற்செயலாய்  செய்யும் ஒரு செயலை எவனோ ஒருவன் பார்த்து  விட்டு, நாளை அவன் உள்நோக்கத்தோடு செய்ய நேரிடும். அவன் தவறுக்கு நாம் பாடம்  தெரிவித்தது போல் அமைய கூடாது . இப்படியாக என் முடிவை மாற்றி விட்டு , வழக்கம் போல் ஜன்னல் காற்றை வாங்க தொடங்கினேன்.

வண்டி மெதுவாக என் காதலியின் ஊரை நெருங்கியது. காதலியை பார்க்க போகிறோம், அதுவும் வெகு நாள் கழித்து என்ற ஆவல் என் மனதை பற்றி கொள்ள , அந்த பெயர் தெரியாத பெண்ணின் மீது இருந்த கண்ணும் , மனதும் சுத்தமாய் அகன்று விட்டது. ஆனால் அவர்களின் கண் என் மேல் படர தொடங்கியது அதன் பின் . ஒரு புறம் ஏதேனும் கேள்வி கேட்டுவிடுவார்களோ  என்று பயம் நெஞ்சை வருடியது.

குளிர்ந்த காற்று  வீச , சந்திரன் மேல் இருந்து அதன் குளுமையை ரசித்து கொண்டு இருந்தான் காசு இல்லாமல் ஓசியாய் . தென்னைகள் ஒரு புரம் அசைந்து ஆடி , ஓலைகள் எழுப்பிய சத்தம் சற்று பயமாகவே இருந்தது.  இருளில் மூழ்கி இருந்த என் காதலியின் இருப்பிடத்திற்கு என்னை ரயில் வண்டி கொண்டு சேர்த்தது.

ஏனோ மனம் ரங்கனின் உயர்ந்த கோபுரத்தை பார்த்ததும் வழக்கம் போல் கண்கள் சிவந்தது. அவன் மேல் எனக்கு தொழில் முறை போட்டி மட்டுமே. ரங்கனின் மீது உள்ள கோவத்தை அடுத்த சில வினாடிகளில் உதயமான் என் காதலி முற்றிலும் போக்கினாள்.

சந்திரன் வீசிய வெள்ளிகிரணங்கள் அவளின் மீது பட்டு வெள்ளி நூலாய் காட்சி தந்தாள். அமைதியாக உறங்கி கொண்டு இருந்த ஊரின் நடுவே ஆரவாரமாய் ஓடி இன்புற்று கொண்டு இருந்தால் , என் வருகையை எதிர் நோக்கி  , சலசலத்து ஓடும் நீரை கொண்டு காத்து இருந்தவளை  கண்கள் பார்த்ததும் அப்படியே ஆவலுடன் , அத் திருவிடத்திலே "மாதவியை கண்ட கோவலன்" போல கண்மயங்க ஆசை.

இது புதிது அல்ல , ஒவ்வொரு முறை அவளை கடக்கும் பொழுதும் ஏற்படும் இச்சை.

நல்ல வேலையாக தொடர்வண்டி நகர்ந்து கொண்டு இருந்தமையால் , நான் காவேரி ஆற்றினுள் குதிக்க வில்லை . மாறாக ஆவலுடன் அவளை பார்த்து மௌனத்தால் என் மனதில் இருந்து மானசீக காதலை வெளி படுத்தி விட்டு , அவளுக்கு என் இரு கைகளை காட்டி v , கண்கள் மூடி பெருமூச்சு விட்டேன்.

கண் திறந்து பார்க்கும் பொழுது வண்டி ஸ்ரீ ரங்கம் நிலையத்தில் நின்றது. சுதாரித்து அருகில் பார்பதற்குள் அந்த பெண் அங்கே காணவில்லை. தலையை நிமிர்த்தி பார்த்தபோது தன் தமயனுடன் இறங்கி கொண்டு இருந்தால்.

எதையும் யோசிக்காமல அவள் இறங்கிய வாயிலின் எதிர் வாயில் வழியே இறங்கி அவள் நடத்து வரும் திசையில் எதிர் பட்டேன்.

(இங்கே என்னை கட்டாயம் நீங்கள் தவறாக நினைக்க வேண்டும்..)

வாலிபம் அல்லவோ , போனவளை இனி எங்கே பார்க்க போகிறோம் , கடைசியாக ஒரு முறை பார்த்து மோட்சம் பெற்று கொள்ளலாமே என்று ஓடினேன். எதிர்பார்த்தது ஒன்று , நடந்தது ஒன்று.

ஆம் எந்த பெண்ணும்  எரிச்சல் படும் செயலை செய்தேன் , ஆனால் அவளோ என்னை கடக்கும் பொழுது புன்னகைத்தால். அது சரி அவள்  என்ன நினைத்து புன்னகைதாலோ தெரியவில்லை, ஆனால நான் நினைத்து கொண்டது "என் தூக்கத்தை கெடுத்த சந்தோஷ தோரணையாக இருக்கும் " என்று தான்.

வண்டி கிளம்புவதற்கான ஒலிப்பான் ஒலிக்க, அதுவரை என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கி கொண்டு இருந்த ராஜேஷ் முழித்து கொண்ட என்னை இருக்கையில் காணாததால் பதறி கொண்டு வாசலில் வந்து எட்டி பார்த்து கடிந்து கொண்டான். சரி தூக்கத்தில் இருந்தவனுக்கு நடந்தது என்ன தெரிய போகிறது, கோபத்தை தவிர. (அவன் கோபத்தையும் மதித்து ஆகா வேண்டும் அல்லவா).

இரவு 1 மணி ஜாமத்திலும் பிழைப்புக்காக மல்லிகை விற்றுக்கொண்டு வந்த பெண்மணி , பெட்டியில் தூங்கி கொண்டு இருந்த அனைவரையும் எழுப்பினால் தான் விற்று கொண்டு இருந்த மல்லிகை மனத்தால்.

சரியாக 1 மணி 10 நிமிடங்களுக்கு "திருச்சி சந்திப்பை" அடைந்தது வண்டி . 20 நிமிடங்கள் கழித்து கிளம்பிய வண்டியில் இப்பொழுது முன் இருந்த கூடத்தில் "பாதியில்,பாதி" கூட இல்லை.

நகரை விட்டு வேகமாக சென்ற வண்டி , அழகான கீதத்துடன் தண்டவாளங்களில் இசை பாட அதை ரசித்த வண்ணம் பயணம்  செய்தோம் . இம்முறை ராஜேஷ் தூங்க வில்லை , என் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கதை பேச தொடங்கினான். வழக்கம் போல் கதை எங்கோ தொடங்கி , ஒரு பாவியின் கதையை வந்தடைந்த உடன் பேச்சை நிறுத்தினோம். வண்டியும் காரைக்குடி ரயில் நிறுத்தத்தில் நிற்கவே மீண்டும் பேச்சு திசை திரும்பியது.

சிறிது நேரத்தில் கலைத்து போன ராஜேஷ் கன்னயர்ந்தும் போனான். . வழக்கம் போல் நான் அதிகாலை குளிர்ந்த காற்றை வாங்கி கொண்டு , காவிரியின் நினைவோடு பயணம் செய்தேன்.

கிழக்கு கடற்கரை பக்கம் நெருங்க நெருங்க ஆவலும் மிக அதிகமாகவே வளர்ந்தது. குளிர்ந்த கடற்கரை காற்று ராஜேஷை எழுப்பி விட்டது. சரியாக 4 மணி அளவில் வண்டி நிலபகுதியின் கடைசி நிலையமான மண்டபத்தை அடைந்து சிறிது நேரம் காத்து கொண்டு இருந்தது.

ஆவலுடன் ஒலிப்பான் சத்தத்தை எதிர் பார்த்து கொண்டு இருந்த நாங்கள் ,வண்டி  நகர்ந்த அடுத்த வினாடியே ஆளுக்கொரு  வாசல் தேடி ஓடினோம். எவ்வளவு பெரிய மனிதரையும் சிறு பிள்ளையாய் ஏங்க வைக்கும் "பாம்பன்" பாலம். கடலுக்கு நடுவே கம்பீரமாய் காட்சி தரும். அதனை காண யாருக்குதான் ஆவல் இருக்காமல் போகும். வண்டி பாலத்தை நெருங்கிய உடன் பயணிகள் அனைவரும் விழித்து  கொண்டு , தத்தம் அவர்கள் ஜன்னல் வழிய வேடிக்கை பார்கலாயினர்.

அழகான இருள் சூழ்ந்த காலை பொழுதில் வண்டி மணிக்கு 20 கி. மீ வேகத்சில் செல்ல , அளவில்லாமல் ரசித்து மகிழ்ந்தோம்.

பயண வழி கட்டுரை - ராமேஸ்வரம் நோக்கி (பகுதி 1)

விதி விடாது !!!

கல்லூரி முடித்த கையோடு , கசப்பான நாட்களை கை விட்டு என்னி கொண்டு இருந்த நாட்கள். வேலை இல்லா திண்டாட்டமும் , விதி செய்த வலியும் என்னை புரட்டி போட்டு ஒரு மன நோயாளி போல் தூக்கம் வராமல் மெத்தையில் மட்டும் உருள வைத்த நாட்கள்.அந்த கொடிய நேரத்தில் எனக்கு உற்ற துணையாகவும் , சில சமயம் உருளும் மெத்தையில் தலையனையாகவும் தோள் குடுத்த தோழன் ராஜேஷ்
.
இப்படி நாட்கள் நகராமல் எங்களை ஆட்டிவைக்க, நாங்களும் குறையில்லாமல் சுற்றி திரிந்தோம்.அந்த சமயம் இருவர் உள்ளத்திலும் ஒரே என்னம் தோன்ற , அதை செயல் படுத்துவது என தீர்மானித்தோம். அது சரி தீர்மானத்தை நிறைவேற்ற  ஒரு பகட காய் வேண்டாமா.
ஆம் மன மாற்றத்திற்காக ஒரு பயணம் செல்லலாம் என்று யோசித்த உடன் எங்களுக்கு பலிகடாவாக சிக்கியது பாவம் "சனி பகவான்" தான். ஆம் சனி பெயர்ச்சி  நெருங்கி கொண்டு இருந்த காலம். திட்டம் என்னவோ ராமேஸ்வரம் சென்று தலை முழுகுவது தான் , அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத "திருநள்ளாறு" துணை புரிந்தது. அவன்  பேரை சொல்லி கிளம்பிய வினை தானோ என்னவோ  அவன் லீலைகளை பயணத்தின் பிற்பாதியில் கண்டு புரிந்து கொண்டோம்.

வருடம் 2009 செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் எங்கள் பயணம் என்று முடிவு செய்தோம். சரியாக மாலை 3 மணி அளவில் எங்கள் மாநகரின் மத்திய  பேருந்து நிலையம் சென்றடைந்தோம். சென்னை - ராமேஸ்வரம் விரைவு வண்டியில் செல்வதற்காக விழுப்புரம்  சந்திப்பு செல்ல வேண்டியதால்  நாங்கள் எங்கள் பயணத்தை "தமிழ்நாடு அரசு போக்குவரத்து" கழகத்தின் பேருந்தில் விழுப்புரம் நோக்கி பயணப்பட்டோம்
.
வெயில் சற்று தனித்து , இதமான காற்று வீச தொடங்கியது. நகரத்தை கடந்து செல்கையில்  மணி 4 30 ய் தாண்டியது. திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் நிறைய கிராமங்கள் உள்ள காரணத்தினால்  64 கிலோமீட்டர் தொலைவை கடக்க சராசரியாக 2 மணி நேரம் ஆகும்.
திருவண்ணாமலை அடுத்த ஆவூரை கடந்து வண்டி சென்று கொண்டு இருந்த வேளையில் , ஒரு கிராமத்து சாலை சந்திக்கும் இடத்தில எதிர் பாராத விதமாக எந்த ஒலிபான்களையும் ஒலிக்காமல் ஒரு பள்ளி வாகனம் கிராமத்து சாலையில் இருந்து பிரதான சாலையில்  நுழையவே , எங்கள் பேருந்தின் ஓட்டுனர் சட் என்று பிரேக் போட்டு சாமர்த்தியமாய் வண்டியை நிறுத்தினார். வேடிக்கை என்ன வென்றால் , பள்ளி வாகன ஓட்டுனர் பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தையில் கடிந்து கொண்டது தான். இது ஒரு தந்திர செயல் , எதிராளி தன்னை  தன் தவறிற்காக  திட்டுவதற்கு முன் தான் முந்தி கொண்டு பழியை அவர் மேல் போடுவது.

வேடிகையான விவாதம் முடிவுற்று பயணம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு 35 வயது மதிக்க தக்க ஒருவர் தன் இரு சக்கர வாகனத்தில் தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல பேருந்தை முந்தி கொண்டு வந்து பேருந்தை மடக்கி நிறுத்தினார். நிலை குலைந்து  போன ஓட்டுனர் சுதாரித்து கொண்டு , அந்த மனிதரை வினவ , தன் பிள்ளையை வண்டியில் ஏற்றுவதர்க்காகவே அப்படி செய்ததாக கூறி விட்டு தன் மகனை ஏற்றி விட்டார்.

ஓட்டுனர் புலம்பி கொண்டு வண்டியை நகர்த்தினார். இதை பார்த்த என் நண்பன் ராஜேஷ் ஓட்டுனரை விட அவன் சற்றே அதிகமாக நிலை குலைந்து போனான். இந்த  நிகழ்வுகளை பார்த்து அப்படியே  கண் அயர்ந்தும் போனான்.

நான் வழக்கம் போல் சில்லிடும் மாலை பொழுதின்  காற்றை ஜன்னலின் வழியே  வாங்கி கொண்டு , இருள் சூழும் அழகை ரசித்த படி பயணித்து கொண்டு இருந்தேன். நேரம் மாலை 6 மணி அளவில் விழுப்புரம் நகரத்தை பேருந்து நெருங்கியது. புகை வண்டி நிலையம் செல்ல வேண்டியதால் நாங்கள் நாலு ரோடு சந்திப்பில் இறங்கி , ஒரு ஆட்டோவில் பயணித்தோம்.

மணி 7 ய் கடந்தபடியால்  இருள் நன்றாக சூழ்ந்து இரவை கண்களுக்கு காட்டியது. வாழ்கையில் சில முறை சோம்பேறியாய்  இருந்தது உண்டு, இந்த முறை சற்று கொஞ்சம் சோம்பேறித்தனம் அதிமாகவே இருந்தது.
ஆம் எப்பொழுதுமே  எந்த பயணத்திற்கும் சரியான நேரத்திற்கே வந்து பழக்கப்பட்ட  நான் ,  புதிதாக பயண மேற்கொள்ளும்  நண்பனுக்கோ பயம் , எங்கே வண்டியை தவற விட்டு விடுவோமோ  என்று. அவன் வற்புறுத்தலின் பேரில் அரை மணி நேரம் முன்னரே வந்து சேரும் சோம்பேறி ஆனேன்.

வரிசையில் நின்று ராமேஸ்வரம் வரை டிக்கெட் எடுத்த பின் , நடை மேடை நோக்கி நடந்தோம். சற்றும் எதிர் பாராமல் ரயில்வே காவல் துறை  எங்களை நிறுத்தி சோதித்தது. நாங்கள் கல்லூரி மாணவர்கள் என்று "காலாவதியான கல்லூரி அடையாள அட்டையை" காட்டியபின் சோதனையை நிறுத்தி விட்டு, எங்களை  செல்ல அனுமதி அளித்தார் அந்த கடமை தவறா அதிகாரி.

அடக்க முடியாத சிரிப்பை அடக்கிகொண்டு , நடைமேடையை விட்டு இறங்கும் பொழுது  இருவரும் பரிமாறி கொண்ட வார்த்தை "4 வருஷம் மதிக்கப்படாத ஐ . டி , இன்னிக்காவது யூஸ் ஆச்சே " நு .

பெரும் கூட்டம் எங்களை  கடக்கவே சற்று அமைதியாய்  நடந்தோம் முன் பதிவு அல்லாத பெட்டி நிற்கும் இடம் நோக்கி . வண்டி வருவதற்கான அறிவிப்பு போட பட்டது. வழக்கம் போல் வண்டி 20 நிமிடம் தாமதம் என்று. சரி சாப்பாடு என்ற ஒரு  கடமையை முடிதுகொள்வோம் என்று இருவரும் சப்பாத்தி பொட்டலம்  வாங்கி பசியை போக்கினோம்.

சாபிட்டு முடித்தவுடன் ராஜேஷ் குப்பை தொட்டியை தேடினான். நான் விழுப்புரம்  ரயில் சந்திப்பிற்கு புதியவன் அல்ல என்பதால் அவனை ரயில் தண்டவாளத்தில் வீச சொன்னேன். காரணம் நடைமேடையில் பல பயணிகள்  நடப்பார்கள் , அமருவார்கள் ஆனால் சுத்தம் செய்ய மாட்டார்கள். நிச்சயம் தண்டவாளத்தில் சுத்தம் செய்ய படுவதால் , நாம் எரியும் குப்பை சரியான இடத்திற்கு சற்று தாமதமாக சென்று சேரும் என்று அறிவ்வுருதினேன்.

ஏழை சொல் என்று அம்பலம் ஏறி இருக்கிறது ,படித்தவன் அல்லவா, பாடம் நடத்தினான். சற்றும் கவனிக்காமல் நான் தண்டவாளத்தில் வீசி  எறிந்துவிட்டு கையை கழுவினேன். ராஜேஷ் ஒரு இந்திய பிரஜை அல்லவா , பக்கத்தில் இருந்த அலுவலகம் நோக்கி சென்று அங்கே குப்பை தொட்டி பற்றி விசாரித்தான். அவர்கள் சொன்ன பதில் எனக்கு வசதியாய்  போயிற்று , அவன் செய்த உபதேசங்களுக்கு பதிலாக ஏளனம் செய்ய. கண்ணியம் மிக்க அந்த அதிகாரியும் , நான் செய்த செயலை தான் செய்ய சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்.

அடுத்ததாக தாகம் தணிக்க கடை அருகே சென்றோம். கோக் பிரியன்  ஆனா எனக்கு வழக்கம் போல் அதிர்ஷ்டம் இல்லை. ஆம் பெப்சி மட்டும் இருப்பதாக சொல்லியவுடன்   ராஜேஷ்கு சந்தோசம்.

எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் தருவாயில் , வண்டியும் நிலையம் வந்தடைந்தது. கூட்டம் ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவு இல்லை . இருக்கைகள் காலியாகவே இருந்தன, இருந்த போதும் மனம் படுத்து தூங்க கூடிய இடத்தை தான் நாடியது.